Sunday, June 22, 2014

காதல் பிரியும் தருணங்களில்...




வலிக்கும்...
கண்ணீர் கசியும்...
இழக்கும் கணங்களில்...
இதயம் துடிதுடிக்கும்...

நரகத்தின் இண்டு இடுக்களில்
பதுங்கிக்கொண்டு
அவள் இருக்கும் திசையை
விழிகள் கணித்துக்கொண்டிருக்கும்...

உனக்காகவே வாழ்கிறேன் என்று
உயிர் நோக உள்ளிருந்தே குரல்கொடுக்கும்...

கைவிடாதே என்று
கடைசி கணம் வரை
கண்ணீர் மல்கக் கெஞ்சும்...

விட்டுவிட்டால்...

இதயம் சுக்குநூறாகும்...
மூச்சிறைக்க முணங்கியபடியே
விழுந்துகிடப்போம்...
இருட்டையும், அவளையும் தவிர
எண்ணத்தில் எதுவும் இருக்காது.

நம்மையே நாம் மறந்துபோவோம்...

மீளமுடியாத கோமா ஒன்று
மூளையில் முளைவிடும்.

வீதித்தெருநாய்கள்
மோந்துபார்த்து
கேள்விகேட்கும்...

அசைவற்ற உயிராய்
நாட்கள் நடுத்தெருவில்
கழியும்...

தெரிந்தவர்கள் தட்டி எழுப்பும்போது
வானம் கண்களில் கூசும்.
பார்ப்பவர்கள் பைத்தியம் என்பார்கள்...

பாசமானவர்களால்
காப்பாற்றப்படும்போது...
அடிப்பார்கள்...
அழுவார்கள்...
உடலை வெந்நீரால் கழுவுவார்கள்...
உயிர் இவைஎதையும்
எளிதில் உணராது...

எண்ணமெல்லாம் அவள்
நீக்கமற நிறைந்து...
அணுவணுவாய் உயிர் அறுப்பாள்...

கைநரம்புகளை அறுத்துக்கொண்டு
வழியும் குருதியை
கண்கொட்டாது பார்த்தபடி
கணங்கள் கழிய...

காப்பாற்றப்பட்டால்...
விருப்பத்தகாத வாழ்க்கை
கழியக் காத்திருக்கும்...

இல்லாவிடில்...

அவள் நினைவுகளோடு
இறுதி மூச்சில்
காதல் விசும்படியே

விடைதெரியாமலேயே...
விடைபெற்றுக்கொள்ளும்...

காதலால் கைவிடப்பட்டவன்
-தமிழ் வசந்தன்