![]() | நான் இங்கே. . . . நீ அங்கே . . . . ஏதோ, என் மீது கசப்பு உனக்கு! உன் வாழ்வில் என் தலையீடு இருப்பதை வெறுக்கிறாய். நான் உன்னோடு உலகை வலம் வர விரும்புகிறேன்! நீயோ நீண்ட பாதையில் தனியாக நடந்து கொண்டு இருக்கிறாய்! |
தார் சாலையில் தகலும் வெப்பம். கானல் நீருக்குள் புகுந்து மனதைப் பூட்டியபடி வெறும் பாதமாய் நீ. . . ! உன் உடல் சிவந்த போது, வெப்பமேறியிருக்கிறது பூமியில்! அத்தனைக்கும் காரணம் என் மீது உண்டான உன் வெறுப்பு. கதிரவனாய் இருந்தால் தட்டி வைத்திருப்பேன். இதை எப்படி. . .? கதிரவன் மறைந்துவிட்டான். செவ்வானம் சிந்தனையைத் தூண்டுகிறது. மேகங்கள் வந்து போக. . . . ஞாபகங்களும் கூடவே திரிகிறது. தூரத்தில் தென்றல் கொஞ்சம் வருவதாகத் தோன்றுகிறது. நீ நினைக்கிறாய் "உனக்கு ஏன் அக்கறை?". தூரத்தில் வந்த தென்றல் உன்னைத் துலாவியபடிச் செல்கிறது. நினைத்த மாத்திரத்தில் நான்! வெறுமையாய் இருக்கும் உனக்கு அருகே. நெடிய சாலை நம்மை வெறித்துப் பார்க்கிறது. "என் மேல் என்ன கோபம்?" நான் கேட்கிறேன். இன்னும் உனக்குக் கோபம் குறையவில்லை. முகத்தைத் திருப்பிக்கொண்டாய். அங்கும் இன்னொரு 'நான்'! உன்னைக் கேட்டபடி! திசை மாறுகிறாய். விடவே இல்லை நான்! - மற்றொரு 'நான்'! நெடிய சாலையில் நெளிவு சுளிவுகளெல்லாம் நானாய் நிறைந்திருக்கிறேன். வானம் கருக்கிறது. காற்றின் அகோரக் குரல். நீ சுற்றும் முற்றும் திரும்புகிறாய். எங்கும் நீக்கமற 'நான்'! வெறித்தபடி என் 'நான்'களின் நெரிசல்களை இடித்துக்கொண்டு தப்ப முற்படுகிறாய். காற்று சுற்றியபடி வந்து கொண்டிருக்கிறது. நீ 'என்'களை மீறி ஓடுகிறாய். 'நான்'கள் எல்லோரும் துரத்துகிறோம். உன் கூந்தல் விரிய, புயல் மூண்டுகொண்டது. எங்கெங்கினும் 'நான்'. போகிற பாதையெல்லாம் உன்னை 'நான்'கள் வரவேற்கிறோம். இறுதியில் 'என்'களைத் தாண்டி நிற்கிறாய்! உன் தேகம் எங்கும் உஷ்ணம். விழி நீரெல்லாம் வியர்வையோடு சேர்ந்தே வழிகிறது! என்னைத் தவிர மற்ற எல்லா 'நான்'களும் மறைந்துவிட்டோம். உன் நாடி பிடித்து. . . . முகம் திருப்பி. . . . விழிநீர் துடைத்து . . . . நீ என்னை மனதார ஏற்றுக்கொண்டாய்! மழை பொழியும் சாலையில்"நாம்"! -தமிழ் வசந்தன் |