Sunday, June 22, 2014

காதல் பிரியும் தருணங்களில்...
வலிக்கும்...
கண்ணீர் கசியும்...
இழக்கும் கணங்களில்...
இதயம் துடிதுடிக்கும்...

நரகத்தின் இண்டு இடுக்களில்
பதுங்கிக்கொண்டு
அவள் இருக்கும் திசையை
விழிகள் கணித்துக்கொண்டிருக்கும்...

உனக்காகவே வாழ்கிறேன் என்று
உயிர் நோக உள்ளிருந்தே குரல்கொடுக்கும்...

கைவிடாதே என்று
கடைசி கணம் வரை
கண்ணீர் மல்கக் கெஞ்சும்...

விட்டுவிட்டால்...

இதயம் சுக்குநூறாகும்...
மூச்சிறைக்க முணங்கியபடியே
விழுந்துகிடப்போம்...
இருட்டையும், அவளையும் தவிர
எண்ணத்தில் எதுவும் இருக்காது.

நம்மையே நாம் மறந்துபோவோம்...

மீளமுடியாத கோமா ஒன்று
மூளையில் முளைவிடும்.

வீதித்தெருநாய்கள்
மோந்துபார்த்து
கேள்விகேட்கும்...

அசைவற்ற உயிராய்
நாட்கள் நடுத்தெருவில்
கழியும்...

தெரிந்தவர்கள் தட்டி எழுப்பும்போது
வானம் கண்களில் கூசும்.
பார்ப்பவர்கள் பைத்தியம் என்பார்கள்...

பாசமானவர்களால்
காப்பாற்றப்படும்போது...
அடிப்பார்கள்...
அழுவார்கள்...
உடலை வெந்நீரால் கழுவுவார்கள்...
உயிர் இவைஎதையும்
எளிதில் உணராது...

எண்ணமெல்லாம் அவள்
நீக்கமற நிறைந்து...
அணுவணுவாய் உயிர் அறுப்பாள்...

கைநரம்புகளை அறுத்துக்கொண்டு
வழியும் குருதியை
கண்கொட்டாது பார்த்தபடி
கணங்கள் கழிய...

காப்பாற்றப்பட்டால்...
விருப்பத்தகாத வாழ்க்கை
கழியக் காத்திருக்கும்...

இல்லாவிடில்...

அவள் நினைவுகளோடு
இறுதி மூச்சில்
காதல் விசும்படியே

விடைதெரியாமலேயே...
விடைபெற்றுக்கொள்ளும்...

காதலால் கைவிடப்பட்டவன்
-தமிழ் வசந்தன்

பிணம் எழுதும் கவிதை
உன்னை இழந்த நாள் முதல்
நான் - நினைக்கும் திராணியுடன்
நடக்கும் பிணம்

உன்னை நினைத்து
பின்னால் அலைந்தவனை
உனக்காவே உழைக்க வைத்து
உருவாக்கி அழகு பார்த்தாய்

நினைக்காத பணியையும்,
நிறைய நிறைய பணத்தையும்,
உனக்காக ஆக்கிவைத்தேன்... - பிறகேன்
பிணமாக்கிப் பிரிந்து போனாய்...

வாங்கிய பொருளெல்லாம்
வாழ்க்கைக்குப் பொருளாகுமா...

அழுக்கும், பசியும் இருந்த போது
இத்தனை வலியை
சுமந்ததில்லை - நீ
எல்லாம் கொடுத்துவிட்டு
இல்லாமல் போனதனால்
வறுமையினும் வறுத்தெடுக்கும்
வாலிபப் பெருங்கொடுமை...

மருளும் விழிகளுக்குள்
உலவிக்கொண்டிருக்கிறாய்...
காட்சிப்பிழை கொண்டு
மோதிச் சிதைகிறேன்...

இதயக்குவியலுக்குள்
சருகாகாத பச்சிளங் குவியலாய்
நம் பழகிய காலங்கள் தான்
எஞ்சியிருப்பதெல்லாம்...

காலம் திரும்பாதென்று
மூளை உரைத்தாலும்,
நீயே இல்லையென்ற
நிதர்சனப் படுகுழிக்குள்
மூழ்கிப் புதையுதடி
தாங்காதச் சிறுமனது

ஆற்றாமல் கடந்தாலும்
போற்றியே தீருவேன்
செத்துங் கொடுக்குமிந்த
மோசமான காதலினை..!
நடைபிணம்,
-தமிழ் வசந்தன்

Saturday, August 21, 2010

காதலனாகிவிடு. . .கடைக்கண்ணை உற்றுநோக்கு
மலையையே மடுவாக்கும்
சக்தியேற்று
காதல் செய்
மரணத்தை மரணிக்கும்
வரம் கடைக்கும்

வறுமைப்போரை
பசியை மறந்து எதிர்கொள்ள
உனக்கு காதல் அவசியம்
உயிர் வேண்டாம் அன்பே
உளமாறக் காதலி
பரற்களில் நடப்பதெல்லாம்
பழரசம் குடிப்பதைப் போல

காதலை ஒப்புக்கொண்டு
செருகிய அம்பை உருவி எரி
விழுந்த இடத்தில்
மலர்ந்து முளைக்கும்
வாசனை மாறாத உயிர்ப்பூக்கள்
புரிகிறதா
வாழ்க்கை தரச் சொல்லவில்லை
வாழ்ந்துபார்க்கச் சொல்கிறேன்

ஆம்!
எரியும்
வலிக்கும்
சிரிப்பாய்
காதலி

எதற்காக
எதிர்கொண்டு நீந்துகிறாய்
நீரிலே நடக்கலாமே
காதலிக்கச் சம்மதமா

கொத்தவந்த பாம்பை
கையிலேந்தி முத்தமிடமுடியும்
உனக்கும் சேர்த்து
காத்தலைக் காதல் செய்யும்
காதலை நீ செய்

கரம்பிடித்தபடியே
உயிர்விடுவதற்கு
எனக்கு இஷ்டம் தான்
சடுதியில் பதில் சொல்
சந்தர்ப்பம் தருவாயா

சூரியனைக் கூப்பிடுவோம்
பிரபஞ்சமே தாண்டுவோம்
இதயம் பரிமாறு
இவையெல்லாம் சாத்தியம்
இங்கே உனக்குக்
காதல் கட்டாயத் தேவை
அலைவரிசைக்கு வரும்வரை
நான் திரும்பப்போவதில்லை
காதலனாகிவிடு
கஷ்டப்படாதே!
-தமிழ் வசந்தன்

Monday, August 9, 2010

காதலியாகாதே. . . .

அடங்க மறுக்கும் தோள்களில்
வலுவிழந்து போனால் - நான்
இறந்துவிட்டிருப்பேன்.
இங்கிருந்து போ . . .
தொந்தரவு செய்யாதே

வறுமைப் போர்க்களத்தில்
வழிகளெல்லாம் பரல்கள்
இருக்கும் உயிரைக் கூட
உனக்கெனத் தரமாட்டேன் - பிறகு
வாழ்ந்தென்ன காண்பாய்

எய்தப்பட்ட அம்புகளை
மார்பிலே தாங்கிக்கொண்டு
ரத்தம் சொட்டச்சொட்ட
சத்தமிட்டுக்கொண்டிருக்கும்
என்னிடம் போய்
'வாழ்க்கை' தரச்சொல்கிறாய்!

எனக்கு கர்ஜனையைப் போல
கவிதை வராது
அடிக்கிறார்கள்
வலிக்கிறது
காதலிப்பதா. . .
அப்படியென்றால்?

இளைப்பாற வழியின்றி
மூச்சுத்திணற மூழ்கியெழுந்து
எதிர்கொண்டு நீந்துகிறேன்
உடன்வந்து சமாளிக்க
உன்னால் இயலாது
உயிரோடு போய்விடு
இனியும் தொடராதே

பாம்புக்கும் ஏணிக்கும் இடையே
பகடைக்காய் உருள்கிறது
கொத்துப்பட்டு கொத்துப்பட்டும்
எட்டு எட்டாய் வைக்கிறவன்.
'காத்தல்' இங்கு எனக்கே
சாத்தியமில்லாவிடில் பிறகு
உன்னை எப்படி
உடனழைத்துச் செல்வேன்?

என்னைக் கரம்பிடித்தால்
எந்தக் கணத்திலும்
மரணிக்க வேண்டிவரும்
தைரியம் உனக்கிருக்கா?
துணிந்து பேசு. . .

இமயம் தாண்ட வேண்டும்
இருண்மை போக்க வேண்டும்
கடமை பல இருக்கு
காதலியாகாதே. . . .
துயரப்படவேண்டிவரும்!
திரும்பிச்சென்றுவிடு. . . !

- தமிழ் வசந்தன்

Saturday, July 31, 2010

பிழைத்துப் போ பெண்ணேஆடிப்பார்க்க இதயம்
பகடைக் காய் அல்ல

பாசாங்கு வார்த்தைகள் - இனி
பலிக்காது தோழி

இருந்தால் - எனக்கு
இடபாகமாய் இரு
இன்றேல் - உன்
சுவாசக் காற்று கூட - நானிருக்கும்
திசை திரும்ப வேண்டாம்

பிழைத்துப் போ பெண்ணே
எனக்கின்னும் பிறவி இருக்கு

-தமிழ் வசந்தன்

Thursday, July 29, 2010

ஒரு பொன்வீணைக் கனவுசித்தத்தில் நித்தம் - ஒரு
சந்தம் அது நிகழ
என்னென்றுக் கண்டேன் - அது
பொன் வீணைக் குரலோ

மண்றாடிக் கண்டேன் - அதை
மீட்டும் முகம் எதுவோ?
செந்தாழம் விரல்கள் - அதில்
சந்தங்களின் பிறப்போ!

பொன் வீணை நரம்பில் - கலை
விளையாடிடும் விரலோ?
கண்டேன் களி கொண்டேன் - அவள்
இசையின் திருவுருவோ?

-தமிழ் வசந்தன்

வழித்துணைபின் செல்லும் மரங்கள் காட்டி. . . .
மழையில் தேநீர் பருகி. . . .
குகைக்குள் அலறி. . . .
கொண்டு வந்த புத்தகம் பகிர்ந்து. .  . .
பழகிப் பழகி. . . .
நீ இறங்கிச் சென்றுவிட்டாய்
நீ சென்ற இடத்தில்
நின்றுகொண்டிருக்கிறேன்
வந்த ரயில்
சென்றுவிட்டது!

-தமிழ் வசந்தன்