Saturday, August 21, 2010

காதலனாகிவிடு. . .



கடைக்கண்ணை உற்றுநோக்கு
மலையையே மடுவாக்கும்
சக்தியேற்று
காதல் செய்
மரணத்தை மரணிக்கும்
வரம் கடைக்கும்

வறுமைப்போரை
பசியை மறந்து எதிர்கொள்ள
உனக்கு காதல் அவசியம்
உயிர் வேண்டாம் அன்பே
உளமாறக் காதலி
பரற்களில் நடப்பதெல்லாம்
பழரசம் குடிப்பதைப் போல

காதலை ஒப்புக்கொண்டு
செருகிய அம்பை உருவி எரி
விழுந்த இடத்தில்
மலர்ந்து முளைக்கும்
வாசனை மாறாத உயிர்ப்பூக்கள்
புரிகிறதா
வாழ்க்கை தரச் சொல்லவில்லை
வாழ்ந்துபார்க்கச் சொல்கிறேன்

ஆம்!
எரியும்
வலிக்கும்
சிரிப்பாய்
காதலி

எதற்காக
எதிர்கொண்டு நீந்துகிறாய்
நீரிலே நடக்கலாமே
காதலிக்கச் சம்மதமா

கொத்தவந்த பாம்பை
கையிலேந்தி முத்தமிடமுடியும்
உனக்கும் சேர்த்து
காத்தலைக் காதல் செய்யும்
காதலை நீ செய்

கரம்பிடித்தபடியே
உயிர்விடுவதற்கு
எனக்கு இஷ்டம் தான்
சடுதியில் பதில் சொல்
சந்தர்ப்பம் தருவாயா

சூரியனைக் கூப்பிடுவோம்
பிரபஞ்சமே தாண்டுவோம்
இதயம் பரிமாறு
இவையெல்லாம் சாத்தியம்
இங்கே உனக்குக்
காதல் கட்டாயத் தேவை
அலைவரிசைக்கு வரும்வரை
நான் திரும்பப்போவதில்லை
காதலனாகிவிடு
கஷ்டப்படாதே!
-தமிழ் வசந்தன்