![]() |
அடங்க மறுக்கும் தோள்களில் வலுவிழந்து போனால் - நான் இறந்துவிட்டிருப்பேன். இங்கிருந்து போ . . . தொந்தரவு செய்யாதே வறுமைப் போர்க்களத்தில் வழிகளெல்லாம் பரல்கள் இருக்கும் உயிரைக் கூட உனக்கெனத் தரமாட்டேன் - பிறகு வாழ்ந்தென்ன காண்பாய் எய்தப்பட்ட அம்புகளை மார்பிலே தாங்கிக்கொண்டு ரத்தம் சொட்டச்சொட்ட சத்தமிட்டுக்கொண்டிருக்கும் என்னிடம் போய் 'வாழ்க்கை' தரச்சொல்கிறாய்! எனக்கு கர்ஜனையைப் போல கவிதை வராது அடிக்கிறார்கள் வலிக்கிறது காதலிப்பதா. . . அப்படியென்றால்? இளைப்பாற வழியின்றி மூச்சுத்திணற மூழ்கியெழுந்து எதிர்கொண்டு நீந்துகிறேன் உடன்வந்து சமாளிக்க உன்னால் இயலாது உயிரோடு போய்விடு இனியும் தொடராதே பாம்புக்கும் ஏணிக்கும் இடையே பகடைக்காய் உருள்கிறது கொத்துப்பட்டு கொத்துப்பட்டும் எட்டு எட்டாய் வைக்கிறவன். 'காத்தல்' இங்கு எனக்கே சாத்தியமில்லாவிடில் பிறகு உன்னை எப்படி உடனழைத்துச் செல்வேன்? என்னைக் கரம்பிடித்தால் எந்தக் கணத்திலும் மரணிக்க வேண்டிவரும் தைரியம் உனக்கிருக்கா? துணிந்து பேசு. . . இமயம் தாண்ட வேண்டும் இருண்மை போக்க வேண்டும் கடமை பல இருக்கு காதலியாகாதே. . . . துயரப்படவேண்டிவரும்! திரும்பிச்சென்றுவிடு. . . ! - தமிழ் வசந்தன் |